சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பெண்களுக்கான ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15 முதல் தொடங்கப்பட உள்ள நிலையில், ரேஷன் அட்டைகளில் பெயர் நீக்கும் விண்ணப்பங்களை ஏற்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை பெற தகுதியுடைய பெண்கள் யார், தகுதியற்றவர்கள் யார் என அண்மையில் அறிவித்த அரசு, அடுத்தக்கட்ட பணிகளில் இறங்கி இருக்கிறது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, குடும்பத்தில் 21 வயது நிரம்பிய பெண், ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், 5 ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் (அ) 10 ஏக்கருக்குக் குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்களின் பெண்கள் இதற்கு தகுதியானவர்கள்.

குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராக இருந்தால் அவரது மனைவி குடும்பத் தலைவியாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும், திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால், அவர்களும் குடும்பத் தலைவிகளாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்து உள்ளது.
ஆண்டிற்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் இதை பெறலாம் என அறிவித்த அரசு, ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே பயன் பெற முடியும் என்றும், ஒரு குடும்பத்தில் தகுதியுடையவர்கள், ஒருவருக்கு மேல் இருந்தால், ஒரே ஒரு பயனாளியை குடும்ப உறுப்பினர்கள் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்து இருக்கிறது.
அதேபோல், "குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்துக்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள், மாநில, மத்திய அரசு ஊழியர்கள் / பொதுத்துறை நிறுவனங்கள்/ வங்கிகளின் ஊழியர்கள் / வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள்" இந்த உரிமைத் தொகையை பெற முடியாது.
ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் தவிர்த்த உள்ளாட்சி பிரதிநிதிகள், சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள், ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள், ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம் (OAP), விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் இதனை பெற முடியாது என அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையே கூட்டுக் குடும்பமாக ஒரே குடும்ப அட்டையின் கீழ் இருக்கும் பலர் குடும்ப அட்டையில் பெயர் நீக்கம் செய்து தனித்தனி குடும்ப அட்டைகளை பெற்று ரூ.1000 உதவித் தொகையை பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை தடுக்கும் வகையில் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் பெறும் பணி முடியும் வரை குடும்ப அட்டை பெயர் நீக்க விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் தராமல் உயர் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளதாகவும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு அறிவுறுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
