மதுரையைச் சேர்ந்த தம்பதியின் 2 வயது குழந்தை தனது அபார நினைவாற்றலால் அனைவரையும் அசரவைக்கிறது. பல பொருள்கள், படங்களை நினைவில் வைத்து சரியாகச் சொல்லி ஆச்சர்யப்படுத்துகிறது.
இப்போதுள்ள குழந்தைகள் மிகச்சிறிய வயதிலேயே பல அரிய சாதனைகளை நிகழ்த்தி வாயடைக்கச் செய்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில், India's World Record-ன் 'இளம் வயதிலேயே அதிக நினைவாற்றல் கொண்ட குழந்தை (Youngest Super Talent Kid With Remarkable Memory Power ) என்ற விருது, மதுரையைச் சேர்ந்த குலசேகரன் - நிரஞ்சனா தம்பதியின் இரண்டு வயதுக் குழந்தை முகுந்த் குமரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சின்ன வயதில் பறவைகள், விலங்குகள், வண்ணங்கள், வடிவங்கள், அன்றாடம் செய்யும் செயல்கள், மலர்கள், பழங்கள், உடல் உறுப்புகள், உலக அதிசயங்கள், ஆங்கில எழுத்துகள், கண்டுபிடிப்புகள் மற்றும் அதைக் கண்டுபிடித்தவர்கள், காய்கறிகள், வீட்டு உபயோகப் பொருள்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள், வாகனங்கள் எனப் பலவற்றையும் சரியாக நினைவில் வைத்து அடையாளம் காட்டுகிறது இந்தக் குழந்தை. இது குறித்து, குழந்தை முகுந்த் குமரனின் அம்மா நிரஞ்சனாவிடம் பேசினோம்.
``அவனுக்கு ஒரு ஆறு மாசம் இருக்கும்போது சும்மா அ,ஆ, ஏ.பி.சி.டி. புத்தகத்தை காமிச்சேன். அதைப் பார்த்து அவன் ரொம்ப குஷி ஆயிட்டான். அப்போதிருந்து கொஞ்சம் கொஞ்சமா சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சேன். ரொம்ப ஜாலியா, சந்தோஷமா கத்துப்பான். இப்போ வரைக்கும் நான் அவனுக்கு பொம்மைகளைக்கூட வாங்கித் தந்ததில்ல.

இதை நான் ஒரு விளையாட்டாத் தான் ஆரம்பிச்சேன். இப்போ வரைக்கும் கிட்டத்தட்ட 20 விதமான ஃப்ளாஷ் கார்ட்ஸ், ஸ்டோரி புக்ஸ்-னு அதுல இருக்கிறதை எல்லாம் சொல்வான். முதல்ல கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்-க்கு நாங்க முயற்சி செஞ்சோம். ஆனா சில காரணங்களால அது நடக்காம போயிடுச்சு. அப்புறம், இந்தியன் வேர்ல்டு ரெக்கார்ட்ஸுக்கு முயற்சி பண்ணினோம். முகுந்த் கத்துக்கிட்டதை, அவங்களுக்கு வீடியோவா எடுத்து அனுப்பினோம்.
இப்போ, புத்தகத்தில் இருக்கும் படங்களை வெச்சு அவனாகவே அழகா நிறைய கதைகளையும் சொல்லுவான். என் வீட்ல நான் தெலுங்கு, என் கணவர் தமிழ். அதனால இப்போ என் பையன் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம்னு மூன்று மொழிகளில் கொஞ்சம் கொஞ்சம் பேசுவான்.
குழந்தையோட ஸ்க்ரீன் டைம், அதாவது அவன் செல்போன் பாக்குற நேரத்தை குறைக்குறதுக்காக அவனுக்கு நிறைய புதுப்புது செயல்பாடுகள் ஏதாச்சும் கொடுத்துட்டே இருப்பேன். அவனுக்கு 2 வயசு என்றாலும், 3 வயசு குழந்தைக்கான செயல்பாடுகளை செய்துடுவான்.

எனக்கு என் வீட்டுலயும் சரி, கணவர் வீட்லயும் சரி ரொம்பவே ஆதரவா இருக்காங்க. முடிஞ்ச வரைக்கும் அவனை ஒரு அறிவான பிள்ளையா வளர்க்க ஆசைப்படுறேன். அதுக்காக அவனை கட்டாயப்படுத்தி எதுவுமே சொல்லித்தர்றது கிடையாது" என்றார்.
மேலும் பல சாதனைகளை செய்ய சுட்டிக்குழந்தை முகுந்த் குமரனுக்கு வாழ்த்து தெரிவித்து விடைபெற்றோம்.
