சந்திரயான் 3! தடுமாறாமல் நிலவில் தரையிறங்கணும்.. வெற்றி நிச்சயம், வெண்ணிலை சத்தியம்! வைரமுத்து கவிதை

 

சென்னை: நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் குறித்து கவிஞர் வைரமுத்து ஒரு கவிதை எழுதியுள்ளார்.

நிலவை ஆய்வு செய்து அங்கு தண்ணீர் இருக்கிறதா, கனிமவளங்கள் இருக்கிறதா என்பதை கண்டறிவது இஸ்ரோவின் கனவாகும். இதற்காக சந்திரயான் 1 விண்கலத்தை வடிவமைத்து கடந்த 2008ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி பிஎஸ்எல்வி சி 11 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.


அது நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை உறுதி செய்தது. உலகில் எந்த நாடுகளும் செல்லாத நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்ய ரூ 978 கோடி மதிப்பில் சந்திரயான் 2 எனும் விண்கலம் உருவாக்கப்பட்டு அது 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

இதில் நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்ய ரோவரும் ஆர்பிட்டரும் இணைக்கப்பட்டிருந்தன. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விக்ரம் லேண்டரின் சாப்ட் லேண்டிங் சவாலானது. இதனால் நிலவில் தரைப்பகுதியில் ரோவர் கருவி மோதி செயலிழந்தது. அதே நேரம் விண்கலத்தின் ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டு தற்போது வரை செயல்பாட்டில் இருந்து வருகிறது.

இதைத் தொடர்ந்து அடுத்த 5 ஆண்டுகளில் சந்திரயான் 3 திட்டத்தை இஸ்ரோ கையிலெடுத்தது. இந்த முறை எந்த தொழில்நுட்பக் கோளாறும் ஏற்படாத வகையில் மாற்றங்களை விஞ்ஞானிகள் செய்துள்ளனர். நாமக்கல் அருகே நிலவை போல் 100 டன் கற்களை பொடியாக்கி பரப்பி வைத்து டெமோ செய்யப்பட்டுவிட்டது. இந்த சந்திரயான் 3 ரூ 615 கோடி செலவில் உருவாக்கப்பட்டது.

இது வெற்றிகரமாக கடந்த வெள்ளிக்கிழமை விண்ணில் ஏவப்பட்டன. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்விஎம் 3 எம் 4 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. இது புறப்பட்ட 16 நிமிடங்களில் 179 கிலோ மீட்டர் உயரத்தை எட்டியது. இந்த விண்கலம் 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கிவிட்டது.

இந்த சந்திரயான் விண்கலம் 40 முதல் 42 நாட்கள் வரை பயணிக்கும். இதன் லேண்டர் கருவி ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு நிலவில் தரையிறங்கும். இந்த நிலையில் சந்திரயான் 3 விண்கலம் குறித்து கவிஞர் வைரமுத்து ஒரு கவிதையை எழுதியுள்ளார்.

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து கூறியிருப்பதாவது:

சந்திரயான் 3

விண்ணில்

நிலைநிறுத்தப்பட்டதில்

இந்திய விஞ்ஞானிகளை

அண்ணாந்து பார்க்கிறது

அகிலம்

ஆகஸ்ட் 23

அது தடுமாறாமல்

தடம் மாறாமல்

நிலாத் தரையில்

இயங்க வேண்டும்

உலகத்தின் கண்கள்

குவிய வேண்டும்

நிலாவின் மீதும்

இந்தியா மீதும்

வெற்றி நிச்சயம்

வெண்ணிலா சத்தியம்

இவ்வாறு கவிஞர் வைரமுத்து கவிதை எழுதியுள்ளார்.

Share:

Popular Posts

Copyright © Factofbitcointhis website user only allowed by 18+