உலகளவில் நிரிழிவு நோயாளிகள் அதிகமாக இருப்பது இந்தியாவில் தான் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இன்னும் இந்த எண்ணிக்கை கூடுமே தவிர குறையாது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தற்போது இள வயதினரும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுவதை பார்த்து வருகிறோம். எந்தவித உடல் இயக்கமும் இல்லாத சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறைதான் இதற்கு முக்கிய காரணமாகும்.

ஆரோக்கியமான டயட்டைப் பின்பற்றினால் நீரிழிவு நோயிலிருந்து நம்மை தற்காத்து கொள்ளலாம். முக்கியமாக, நீரிழிவு நோயாளிகளுக்கு நார்ச்சத்து மிகுந்த உணவுகள் மிகவும் ஆரோக்கியமானதாகும். மலச்சிக்கலை தடுத்து, மலம் கழிப்பதை சீராக்குகிறது. மேலும், உடல் எடையை மேம்படுத்தவும், சில வகையான புற்றுநோய்கள் மற்றும் இதய நோய் வரும் ஆபத்திலிருந்து குறைக்கவும் இந்த நார்ச்சத்து மிகுந்த உணவுகள் உதவுகிறது. மேலும், இது நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்கி டைப்-2 டயாபடீஸ் வரும் அபத்திலிருந்து நம்மை காக்கிறது.

சப்ஜா விதைகள்: சப்ஜா அல்லது துளசி விதைகள் ஸ்மூதிஸ், தயிர் மற்றும் பிற உணவுகளுக்கு நல்ல சுவையை கொடுக்கும். மேலும், இதை பயன்படுத்துவது மிகவும் எளிமையானது. சப்ஜா விதைகளில் நிறைய நார்ச்சத்துகள் உள்ளது. குறிப்பாக பெக்டின் உள்பட கரையக்கூடிய நார்ச்சத்தும் அதிகளவு ஓமேகா-3 ஃபேட்டி ஆசிடும் உள்ளது. ஒரு டீ ஸ்பூன் சப்ஜா விதைகளில் 3.5 கிராம் நார்ச்சத்து அடங்கியுள்ளது.

பார்லி: நமது கொலஸ்ட்ராலையும் சர்க்கரை அளவையும் குறைக்கும் பீட்டா குளுக்கன் என்ற நார்ச்சத்து இதில் அதிகமாக உள்ளது. செரிமானத்தை மேம்படுத்தவும் உடல் எடையை குறைக்கவும் இது உதவுகிறது. சூப், சாலட் போன்றவற்றிலும் அல்லது அரிசிக்கு பதிலாகவும் பார்லியை பயன்படுத்தலாம். 20 கிராம் பார்லியில் 3.4 கிராம் நார்ச்சத்து உள்ளது.

ஆப்பிள்: மிகவும் ஆரோக்கியம் நிறைந்த பழங்களில் ஒன்றாக கருதப்படும் ஆப்பிளில் அதிகமாக நார்ச்சத்து உள்ளது. இதில் இருக்கும் நார்ச்சத்தின் க்ளைசெமிக் குறியீடு மிகவும் குறைவாகவே இருப்பதால், இதை நீரிழிவு நோயாளிகள் தங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

பருப்பு: இந்தியாவில் அதிகமானோர் பயன்படுத்தி வரும் இந்த உணவில் அதிகளவு புரதமும், விட்டமினும், மினரலும் அடங்கியுள்ளது. ஆகையால் இதை நீரிழிவு நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம். மேலும் இதில் இருக்கும் நார்ச்சத்து, சர்க்கரை அளவை சீராக்குகிறது.

ஓட்ஸ்: ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக ஓட்ஸ் கருதப்படுகிறது. இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து உள்ளதால், ஓட்ஸை குறைவாக சாப்பிட்டாலே நம் வயிறு நிரம்பிவிடும். இதனால் உங்களுக்கு நீண்ட நேரம் பசி எடுக்காது. மேலும் இது நமது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவிற்கு உதவுகிறது.
