சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சுகர் இருக்கலாம். அதனால் மருத்துவர் சொன்னதால் அவர் பாதயாத்திரை செல்கிறார் என அக்கட்சியின் மூத்த நிர்வாகி எஸ் வி சேகர் விமர்சித்துள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பதவியேற்றது முதல் மூத்த நிர்வாகிகளுக்கு அவர் மரியாதை கொடுத்து எதையும் ஆலோசிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அரசல் புரசலாக இருந்து வந்தது. ஆனால் இது போன்றதொரு குற்றச்சாட்டை எஸ் வி சேகர் வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்.
அண்மைக்காலமாக அண்ணாமலையை எஸ் வி சேகர் கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எஸ் வி சேகர் கூறுகையில், நடிகர் விஜய் இரவு நேர பயிலகம் திறந்திருப்பது வரவேற்புக்குரியது. அரசியலுக்கு வருவோர் காமராஜரின் வழியை பின்பற்றினால் அவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
விஜய் அரசியலுக்கு வரக் கூசாது என யாரும் சொல்ல முடியாது. விஜய் அரசியலுக்கு வந்தால் நமக்கு ஓட்டு பாதிக்கப்படுமோ நம்மால் அரசியல் செய்ய முடியாதோ என நினைப்பவர்கள் மட்டுமே விஜய் அரசியலுக்கு வருவதை எதிர்ப்பார்கள். விஜய் ஒரு இந்திய குடிமகன். அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு. அந்த கட்டமைப்புடன் அவர் சரியான நேரத்தில் அரசியலுக்கு வந்தால் வெற்றி கிடைக்கும்.
புதிதாக யாரும் அரசியலுக்கு வந்தால் வெளியில் இருந்து புதிதாக ஓட்டு வருவதில்லை. தற்போதுள்ள அரசியல் கட்சிகளின் ஓட்டுதான் பிரிந்து போகும். இதனால் யார் அரசியலுக்கு புதிதாக வந்தாலும் மற்ற அரசியல் கட்சிகள் பாதிக்கப்படும். எனக்கு தெரிந்து புதிதாக பிராமணர்கள் கட்சி ஆரம்பிக்கவுள்ளார்கள். எனவே அவர்களின் ஓட்டு அங்கேதான் செல்லும்.
பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக நானும் செய்திகளில் பார்த்தேன். அனேகமாக அவருக்கு சுகர் இருக்குமோ என்னவோ தெரியவில்லை. தினமும் நடக்க வேண்டும் என டாக்டர் கூறியிருக்கலாம். அதனால் தான் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கலாம். எனவே நடைப்பயணத்தால் எந்தவித பிரயோஜனமும் இல்லை.
சும்மாவே மிஸ்டு காலை வைத்துக் கொண்டு எங்கள் கட்சியில் இத்தனை பேர் உள்ளனர் என கூறுவதெல்லாம் நம்மை நாமே புகழ்ந்து கொள்வது. தற்போது நடைபெறும் ஆபரேஷன், தேர்தல் முடிவான போஸ்ட்மார்டத்தில் தெரிந்து விடும். பிரதமர் மோடி தமிழகத்தில் என்ன எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார். பாஜக 300 இடங்களுக்கு மேல் பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை அமைத்தும். ஆனால் இது அண்ணாமலை உதவியால் கிடையாது. இவ்வாறு எஸ் வி சேகர் கடுமையாக விமர்சித்தார்.
அண்ணாமலை தனது நடைப்பயணம் குறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அவர் டெல்லி சென்ற போது நட்டாவை சந்தித்தார். மேலும் திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் ஊழல் குற்றச்சாட்டுகளை கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட்டார். அதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகத்தை வெளியிடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
அதில் நிறைய அமைச்சர்கள், அவர்களுடைய குடும்பத்தினரின் சொத்து மதிப்புகள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். முதல் பாகத்தில் முதல்வர் ஸ்டாலின், அவருடைய குடும்ப உறுப்பினர்கள், எம்பி டி.ஆர்.பாலு, எம்பி கனிமொழி, எம்பி தயாநிதி மாறன், அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோரின் சொத்து மதிப்புகளை வெளியிட்டிருந்தார். இதையடுத்து அவர்கள் அதற்கான ஆதாரம் கொடுக்காவிட்டால் கோர்ட்டில் கேஸ் போடப்படும் என தெரிவித்தனர். ஆனால் எந்த ஆதாரத்தையும் அண்ணாமலை சமர்ப்பிக்காததால் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதாக அறிவித்து முதலில் டி.ஆர். பாலு வழக்கு தொடர்ந்துள்ளார்.
