'இந்திய அணியின் சிறந்த மேட்ச் வின்னர்களில் அஷ்வினும் ஒருவர்' - பவுலிங் கோச் பாராட்டு.

 

ந்திய அணியின் மேட்ச் வின்னர்களில் ஆல்ரவுண்டர் அஷ்வினும் ஒருவர் என்று பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே பாராட்டு தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அஸ்வின் முக்கிய காரணமாக அமைந்த நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் அஷ்வின் விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த 12ம் தேதி டோமினிக்காவில் தொடங்கியது இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து விளையாடிய இந்திய அணி 421 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதையடுத்து 2 ஆவது இன்னிங்சை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 130 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும், 2ஆவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அவரது ஆட்டம் குறித்து இந்திய அணியின் பவுலிங் கோச் பராஸ் மாம்ப்ரே கூறியதாவது- எந்த ஒரு அணியும் முதல் இன்னிங்ஸில் அதிகமான ஸ்கோரை எடுக்க வேண்டும்.



அப்போதுதான் அது பவுலர்களுக்கு தங்களது பணியை சிறப்பாக செய்ய உதவியாக இருக்கும். அஸ்வினும் ஜடேஜாவும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். அவர்களுடைய மதிப்பு எங்களுக்கு நன்றாக தெரியும். என்னை பொறுத்தவரையில் இந்திய அணியின் மிகச்சிறந்த மேட்ச் வின்னர்களில் அஸ்வினும் ஒருவர். அவர் பல ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்துள்ளார். அவரது திறமை எந்த தொய்வும் இன்றி அனைத்து போட்டிகளிலும் வெளிப்பட்டு வருகிறது. அறிமுக டெஸ்டில் சதம் அடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதனை மிக எளிதாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் செய்து முடித்திருக்கிறார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்
Share:

Popular Posts

Copyright © Factofbitcointhis website user only allowed by 18+