சென்னை: விவாகரத்து வழக்குகளில் உச்ச நீதிமன்றம் கொண்டு வந்துள்ள பல புதிய சட்ட திருத்தங்கள் பற்றிய புரிதல், விவாகரத்து வழக்குகளை நடத்தும் வழக்கறிஞர்களுக்கு கூடஇருப்பது இல்லை என ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா வேதனை தெரிவித்தார்.
அகில இந்திய பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சட்டங்களில் செய்யப்படும் மாற்றங்கள் வரமா, சாபமா என்ற தலைப்பில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு சென்னையில் நடந்தது. நிகழ்வில் தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கே.சாந்த குமாரி தலைமை வகித்தார்.
அகில இந்திய பெண் வழக்கறிஞர்கள் கூட்ட மைப்பின் தலைவர் ஹேமலதா மகிஷி கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார். நிகழ்வில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ''பெண் வழக்கறிஞர்கள் எப்போதும் பின்வரிசையில் இருக்காமல், முன்வரிசைக்கு வந்து வழக்குகளை திறம்பட வாதாடி ஜெயிக்க வேண்டும்.
இப்போதெல்லாம் பெண்கள் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளனர். நீதித்துறையிலும் உரிய பங்களிப்பை செய்து வருகின்றனர். பெண்களின் முன்னேற்றத்தில் தான் சமூக முன்னேற்றமும் அடங்கி இருக்கிறது. பெண் வழக்கறிஞர்கள் போட்டித் தேர்வுகளிலும் பங்கேற்று தங்க ளின் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
தேசிய பசுமை தீர்ப்பாயத் தலை வரும், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியுமான புஷ்பா சத்ய நாராயணன் பேசுகையில், பெண்கள் நீதித்துறையில் அதிகளவில் கோலோச்சி வருகின்றனர். 24 மணி நேரமும் பணிபுரிய வேண்டும் என்ற கட்டாயம் உள்ள இடங்களிலும் கூட இளம் பெண் குற்றவியல் நடுவர்கள் திறமையாக பணிகளை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது என்றார்.
பின்னர் சட்டங்களில் செய்யப்படும் மாற்றங்கள் வரமா அல்லது சாபமா என்ற தலைப்பில் நடந்த சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கில் தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் முன்னாள் உறுப்பினரும், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியுமான எஸ்.விமலா திருமண சட்டங்களில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து பேசுகையில், விவாகரத்து வழக்குகளில் உச்ச நீதிமன்றம் பல்வேறுசட்ட திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.
ஆனால் அதுபற்றிய புரிதல் நம்மில் பலருக்கு குறிப்பாக விவாகரத்து வழக்குகளை நடத்தும் வழக்கறிஞர்களுக்கு கூட இல்லை என்பது வேதனைக் குரிய விஷயம். கணவர் வாங்கும் சொத்துகளில் மனைவிக்கும் சம உரிமை உள்ளது என்பதை பெண் வழக்கறிஞர்கள் தான் இந்த சமூகத்துக்கு புரியவைக்க வேண்டும். போக்சோ சட்டங்களில் இன்னும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தால் மட்டுமே பாலியல் அத்துமீறல் சம்பவங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும் என்றார்.
பின்னர் குழந்தைகள் பாலியல் அத்துமீறல்கள் தடுப்பு மற்றும் ஆற்றுப்படுத்தும் மையமான துளிர் அமைப்பின் வித்யா ரெட்டி பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி என்பது குறித்தும், அண்ணா பல்கலைக் கழகத்தின் மகளிர் மேம்பாட்டு மைய நிறுவன இயக்குநர் கே.ஹேமலதா பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்கள் மற்றும் துன்புறுத்தல்களில் இருந்து சட்ட ரீதியாக தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்தும் கருத்துரையாற்றினர்.
முன்னதாக தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ஜெ.ஆனந்த வல்லி வரவேற்க, அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த ரேவதி நன்றி கூறினார்.
